பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

ஹத்ரஸ் சம்பவ சிபிஐ விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி

ஹத்ரஸ் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி

புதுதில்லி: ஹத்ரஸ் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந்திர படோரியா கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்தரஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தப் பெண் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். 

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹாத்தரஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீசார், புதன்கிழமை அதிகாலை தகனம் செய்தனர். 

இந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஹத்ரஸ் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைந்துள்ள உத்தரப்பிரதேச அரசின் மீது பல்வேறு கேள்வி எழுப்பியுள்ள பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந்திர படோரியா,  இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியால் கோரப்பட்டதாகவும், விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று அவர் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிபிஐ விசாரணையில் "உச்சநீதிமன்ற நீதிபதியை நியமிப்பதற்கான விதிமுறையை கொண்டு வர வேண்டும், இதனால் நியாயமான விசாரணை நடைபெறும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூகத்தினரிடையே நம்பிக்கை ஏற்படுவதுடன், குற்றவாளிகள் இரும்புக்கரம் கொண்டு தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக" படோரியா கூறினார்.

"ஹத்ரஸ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண்ணின் உடலை தகனம் செய்ய பெற்றோர் அனுமதிக்கப்படவிலை.  இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச அரசு மீது மக்கள் மிகவும் கோபமாக உள்ளனர், குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோபமாக உள்ளதாக படோரியா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com