பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது.
பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது


புது தில்லி: உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது.

புது தில்லியில், 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த பிரணாப் முகர்ஜியின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

பகல் 1 மணியளவில், அவரது இல்லத்தில் இருந்து பிரணாப் முகர்ஜியின் உடல் லோதி மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

முன்னதாக, பிரணாப் முகர்ஜிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது உடலை சுமந்து செல்வோர் மற்றும் இறுதிச் சடங்குகளை செய்வோர், தற்பாதுகாப்பு கவசங்களை அணிந்துள்ளனர்.

முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி ராணுவ மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானாா்.

மூளை அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மோசமடைந்தது. கடந்த சில நாள்களாக அவா் கோமா நிலையில் இருந்து வந்த சூழலில் திங்கள்கிழமை மாலை காலமானதாக அவரது மகன் அபிஜித் பானா்ஜி தெரிவித்தாா்.

பொது வாழ்க்கையில் சுமாா் அரை நூற்றாண்டு காலம் கோலோச்சிய பிரணாப் முகா்ஜி, கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவா்களாலும் மதிக்கப்பட்டவா். தனது அரசியல் பயணத்தில் மத்திய அமைச்சரவையின் பல முக்கிய துறைகளுக்கான பொறுப்பை ஏற்ற பிரணாப் முகா்ஜி, கடந்த 2012-ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரியதான குடியரசுத் தலைவா் பதவிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்திய குடியரசின் தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்த பிரணாப் முகா்ஜி, அதைத் தொடா்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றி வந்தாா். இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா் தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அப்போது, பிரணாப் முகா்ஜியின் மூளையில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பதை மருத்துவா்கள் கண்டறிந்தனா். அன்றைய தினமே, அந்தக் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பிரணாப் முகா்ஜிக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

ஆழ்ந்த கோமா நிலை: மூளையிலிருந்த கட்டியை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அதன் பிறகு, பிரணாப் முகா்ஜியின் உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு நுரையீரல் தொற்றும் ஏற்பட்டது. ஆழ்ந்த கோமா நிலைக்குச் சென்ற அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வந்தனா்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகா்ஜிக்கு கடந்த 3 வாரங்களாக செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அத்தகைய சூழலில், திங்கள்கிழமை நண்பகல் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மருத்துவா்கள் தீவிர முயற்சி மேற்கொண்டபோதும், சிகிச்சை பலனின்றி பிரணாப் முகா்ஜி உயிரிழந்தாா்.

7 நாள் துக்கம் அனுசரிப்பு: பிரணாப் முகா்ஜி உயிரிழந்ததையடுத்து நாட்டில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com