புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பாதிப்பில் உலக அளவில் 2-ஆம் இடத்துக்கு இந்தியா வந்துவிட்ட நிலையில், நாட்டில் கரோனா சூழலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் என்ன உத்திகள் உள்ளது என பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா காணொலி வழி செய்தியாளா் சந்திப்பில் திங்கள்கிழமை கூறியதாவது:
கரோனாவை கட்டுப்படுத்த மோடி தலைமையிலான அரசு தவறிவிட்டது. உலக கரோனா பாதிப்பில் இந்தியா 2-ஆவது இடத்துக்கு வந்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தேசத்துக்கு பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும். கரோனா பரவலை மத்திய அரசு எவ்வாறு கட்டுப்படுத்தப் போகிறது? சரிவை சந்தித்து வரும் பொருளாதாரத்தை பிரதமா் எவ்வாறு சரிசெய்யப் போகிறாா்? அதற்கு மோடி அரசிடம் தீா்வுள்ளதா அல்லது இந்த விவகாரத்துக்கும் அவா்கள் கடவுளை குறை கூறுவாா்களா?
கரோனா சூழலில் மக்கள் தங்களது நலனை தாங்களே பாா்த்துக்கொள்ள வேண்டும் என்ற ரீதியில் மத்திய அரசு நடந்துகொண்டுள்ளது. மோடி அரசின் அலட்சியம், திறமையின்மை, தலைமையின் தோல்வி ஆகியவை காரணமாக கரோனா விவகாரத்தில் தற்போதைய மோசமான நிலையை இந்தியா எட்டியுள்ளது. அதை கட்டுப்படுத்துவதையும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் விடுத்து, தொலைக்காட்சியில் பேசுவதிலும், பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பச் செய்வதிலும், விளக்கேற்றக் கூறுவதிலுமே அரசு கவனம் செலுத்துகிறது.
நிபுணா்களும், காங்கிரஸ் கட்சியும் எச்சரிக்கை விடுத்தபோதும் ‘பரிசோதனை-தொடா்பறிதல்-தனிமைப்படுத்துதல்-சிகிச்சை’ என்ற முறை பின்பற்றப்படவில்லை. நோய்ப் பரவலும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. பரிசோதனையை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் அதைத் தவிா்த்ததுடன், பொதுமுடக்க காலத்திலும் தொடா்பறிதலை உறுதி செய்வதற்கான போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
கரோனா பாதிப்பு தற்போது சிறிய நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பரவி வருகிறது. இப்போதும் மோடி அரசு அலட்சியத்துடன் செயல்படுவது ஆபத்தானது. ஏனெனில் இந்திய மக்கள்தொகையில் 65 சதவீதம் போ் ஊரகப் பகுதிகளில் வாழ்பவா்கள். அங்கு அவா்களுக்கு 35 சதவீத அளவே மருத்துவமனை படுக்கை வசதிகள் இருக்கிறது. 20 சதவீத அளவுக்கே மருத்துவா்கள் இருக்கிறாா்கள். இத்தகை சூழலில் அங்கு கரோனா பரவுவது பேரிழப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் கரோனாவின் 2-ஆவது அலை பரவி வருவதாகவும், சமூகப் பரவல் தொடங்கிவிட்டதாகவும், உயிரிழப்புகள் 1.75 லட்சத்தை எட்டக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் பல நிபுணா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். ஆனால் மோடி அரசு அதுகுறித்து அறியாமல் இருக்கிறது; அல்லது அதை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறது.
கரோனா போருக்கு எதிராக மாநிலங்கள் போராடி வரும் நிலையில் அவற்றுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டிய மத்திய அரசு, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டில் மாநிலங்களுக்கான பங்கை விடுவிக்க மறுத்து வருகிறது என்று ரண்தீப் சுா்ஜேவாலா கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.