ஐசிஐசிஐ கடன் மோசடி: தீபக் கோச்சாருக்கு செப்.19 வரை காவல்

​ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கில், தீபக் கோச்சாரை செப். 19-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
​ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கில், தீபக் கோச்சாரை செப். 19-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (கோப்புப்படம்)
​ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கில், தீபக் கோச்சாரை செப். 19-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (கோப்புப்படம்)


ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கில், வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரை செப். 19-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் நேற்றிரவு (திங்கள்கிழமை இரவு) கைது செய்யப்பட்ட தீபக் கோச்சார், இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, செப்டம்பர் 19-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதையடுத்து, அதுபற்றி கூடுதல் தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கு விவரம்:

விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி முறைகேடாக ரூ.1,875 கோடி கடன் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘ஐசிஐசிஐ வங்கி வழங்கிய மொத்த கடன் தொகையில் விடியோகான் இண்டர்நேஷனல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.300 கோடி வழங்கப்பட்டது. அந்தக் கடன் தொகையை வழங்க சந்தா கோச்சார் தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளது. அந்தத் தொகையில் ரூ.64 கோடியை விடியோகான் நிறுவனம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு சொந்தமான நியூபவர் ரின்யூவபிள்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி சட்டவிரோதமாக கைமாற்றியுள்ளது’ என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக இவ்வாண்டு தொடக்கத்தில் சந்தா கோச்சார், தீபக் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com