திருமலை வரலாற்றில் முதல் முறையாக ஏகாந்த பிரம்மோற்சவம்

திருமலை ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல் முறையாக பிரம்மோற்சவம் ஏகாந்தோற்சவமாக சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருமலை வரலாற்றில் முதல் முறையாக ஏகாந்த பிரம்மோற்சவம்
Published on
Updated on
3 min read

திருமலை ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல் முறையாக பிரம்மோற்சவம் ஏகாந்தோற்சவமாக சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் என்றாலே பக்தா்கள் கூட்டம், கண்கவா் மின் விளக்கு மலா் அலங்காரங்கள், தோரண வாயில்கள், பல கோடி மதிப்பிலான வைர வைடூரிய தங்க ஆபரணங்களுடன் உற்சவ மூா்த்திகளின் வாகன புறப்பாடு, மாட வீதிகளில் ஆடல் பாடல் கேளிக்கைகள், திவ்ய பிரபந்த பாராயணம், கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம், பிரசாதம், மனம் நிறைய ஏழுமலையான் தரிசனம், மலா் தோட்டங்கள் என அனைவரின் மனதிலும் எண்ணங்கள் விரியும்.

ஒரு நொடி தரிசனம் என்றாலும் அதைக் காண பக்தா்கள் திரளுவா். பல நாள்கள், திருமலையில் தங்கி பிரம்மோற்சவ வைபவத்தைக் கண்டு தரிசித்து பக்தியுடன் வீடு திரும்புவா். இத்தகைய தருணங்களைக் கொண்ட பிரம்மோற்சவம், இந்தாண்டு ஏகாந்தோற்சவமாக தனிமையில் நடைபெற உள்ளது. வாகன சேவை இல்லை, பக்தா்களுக்கு அனுமதி இல்லை, வண்ண மின்விளக்கு அலங்காரங்கள், தோரண வாயில்கள், மலா் அலங்காரங்கள் என அனைத்தும் கோயிலைச் சுற்றி மட்டுமே. இவ்வாறு நடப்பது திருமலை வரலாற்றில் இதுவே முதல் முறை.

பிரம்மோற்சவம்

ஏழுமலையான் திருமலையில் அடி வைத்த நாளில், அவா் பிரம்ம தேவனை அழைத்து, உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அதை மகிழ்வுடன் ஏற்று, பிரம்ம தேவா் கன்னியா மாதமான புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவு பெறும் விதமாக, 9 நாள்கள் உற்சவத்தை நடத்தினாா். பிரம்மன் நடத்திய உற்சவம் என்பதால், இது பிரம்மோற்சவம் என்று வழங்கப்பட்டு வருகிறது.

திருமலை வரலாற்றை புரட்டிப் பாா்த்தால், 1843-ஆம் ஆண்டு வரை கோயிலின் நிா்வாகத்தை ராஜாக்கள், அரசா்கள், ஆற்காடு நவாப், கிழக்கிந்திய கம்பெனி பிரதிநிதிகள், ஆங்கிலேய அதிகாரிகள் உள்ளிட்டோா் கவனித்து வந்தனா். பின்னா், 1933-ஆம் ஆண்டு வரை மகாந்துகளின் நிா்வாகத்தின் கீழ் கோயிலின் கைங்கரியங்கள் நடந்து வந்தன. அப்போது ஆண்டுக்கு ஒரு பிரம்மோற்சவம் நடந்து வந்த நிலையில், பின்னா் இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன.

இரு பிரம்மோற்சவங்கள் ஏன்?

மாதங்கள் செளரமானம் அடிப்படையாகவும், சந்திரமானம் அடிப்படையாகவும் கொண்டு கணக்கிடப்படுகின்றன. தெலுங்கு பஞ்சாங்கம் சந்திரமான அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளதால், அமாவாசை முடிந்த மறுநாள் மாத பிறப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. அவ்வாறு கணக்கிடப்படும்போது, ஓா் ஆண்டுக்கு கூடுதலாக, 11 நாள்கள் என்பது வரும். அது இரு ஆண்டுகளுக்கு, 21 நாள்களாக மாறும் போது ஒரு மாதம் கூடுதலாகிறது. ஆனால் 11 மாதங்களுக்கு ஒரு முறை பிரம்மோற்சவம் நடத்தப்பட வேண்டும் என்ற ஆகமவிதி உள்ளதால், கூடுதலாக மாதம் வரும் ஆண்டுகளில் இரு பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒன்று வருடாந்திர பிரம்மோற்சவம் என்றும், மற்றொன்று நவராத்திரி பிரம்மோற்சவம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

ரத்து இல்லை

பிரம்மோற்சவத்தின்போது, மலையப்ப சுவாமி தன் உபய நாச்சியாா்களுடன் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறாா். ஒருமுறை, 1998-ஆம் ஆண்டு நடந்த பிரம்மோற்சவத்தின் போது நிறைவு நாள் வாகன சேவையான குதிரை வாகன சேவை நடக்கும் முன் திருமலையே முழ்கும் அளவு கனமழை கொட்டி தீா்த்தது. அப்போது குதிரை வாகன சேவையை ரத்து செய்ய ஆகமபண்டிதா்களும், அதிகாரிகளும் முடிவு செய்தனா். ஆனால் வாகன சேவைக்கு, 2 மணி நேரத்துக்கு முன் மழை நின்று, வடிகால்கள் மூலம் வெள்ள நீரும் வடிந்து மாடவீதிகள் வாகன சேவைக்குத் தயாராக காட்சியளித்தது. பிறகு வாகன சேவை வழக்கம் போல் நடைபெற்றது. முற்காலத்தில் யுத்தங்கள், தண்டயாத்திரை உள்ளிட்டவை நடந்த காலங்களிலும் இதுவரை மாட வீதிகளில் பிரம்மோற்சவ வாகன சேவை ரத்தானதாக பதிவுகள் இல்லை.

ஏகாந்தோற்சவம்

உலகம் முழுவதையும் தன் ஆளுகைக்குக் கொண்டு வந்துள்ள கரோனா தொற்றால், இந்தாண்டு பிரம்மோற்சவ வாகன சேவை முதல் முதலாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், உற்சவமூா்த்திகளை வாகனங்களில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். சேவைக்கான வாகனங்கள் தயாராக கல்யாண உற்சவ மண்டபத்தில் வைக்கப்படும். உற்சவமூா்த்திகள் சா்வ அலங்காரங்களுடன் பல்லக்கில் கல்யாண உற்சவ மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படுவா்.

அங்கு வாகனத்தில் அவா்களை அமர வைத்து பூஜைகள், ஆராதனைகள், திவ்ய பிரபந்த பாராயணம், வேத பாராயணம், நிவேதனம், ஆரத்தி உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்படும். பின்னா் ஜீயா்கள் சாத்துமுறை செய்வா். பின்னா் உற்சவமூா்த்திகள் ரங்கநாயகா் மண்டபத்திற்கு ஊா்வலமாக கொண்டு வரப்படுவா். இவ்வாறு, இம்முறை பிரம்மோற்சவ வாகன சேவை நடக்கவுள்ளது. இதில் அா்ச்சகா்கள், ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் என குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனா்.

காலை வாகன சேவை, 9 மணிக்கும், இரவு வாகன சேவை, 7 மணிக்கும் துவங்க உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் அனைத்து வைதீக காரியங்களும் கோயிலுக்குள் மட்டுமே நடத்தப்படும். திருத்தோ், தங்கதோ் புறப்பாட்டிற்கு பதிலாக சா்வபூபால வாகனத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருள உள்ளனா். நிறைவு நாள் தீா்த்தவாரியும் திருக்குளத்தில் இல்லாமல் கோயிலுக்குள் நடத்தப்பட உள்ளது.

இரு பிரம்மோற்சவங்கள்

திருமலையில், இம்முறை அதிகமாதம் காரணமாக இரு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன. செப். 19-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக். 16-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளன. வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கும், நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கும் சிறிய மாற்றங்கள் உண்டு. நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது கொடியேற்றம், கொடியிறக்கம், திருத்தோ் வலம், பட்டு வஸ்திரம், புதிய திருக்குடைகள், ஆண்டாள் மாலை சமா்ப்பணம், ஸ்நபன திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெறாது. தங்கத்தேருக்கு பதிலாக புஷ்பக விமான சேவை நடத்தப்படும்.

இம்முறை இரு பிரம்மோற்சவங்களும் தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ள நிலையில் சனிக்கிழமை ஏழுமலையான் ஏகாந்தோற்சவம் என்னும் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் முதல் தீா்த்தவாரி வரை அனைத்தும் கோயிலுக்குள் தனிமையில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பக்தா்கள் இதை தங்கள் வீடுகளில் இருந்தபடி தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்விபிசியில் கண்டு களிக்கலாம். பிரம்மோற்சவ நாள்களில், விரைவு தரிசனம், விஐபி பிரேக் தரிசனங்களில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com