அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் ஏர்டெல், ஜியோ

வரும் மாதங்களில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கவரும்
அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் ஏர்டெல், ஜியோ



புது தில்லி: வரும் மாதங்களில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என ஆக்ஸிஸ் கேப்பிட்டல் நிறுவனம் கணித்துள்ளது. 

வோடஃபோன் ஐடியா}வின் நிதி நிலைமை மோசமாக இருப்பது இந்த இரு நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமையும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் மதிப்பீடுகள் குறித்து ஆக்ஸிஸ் கேப்பிட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

இதுவரை அதிகம் செல்லிடப்பேசி சேவையைப் பயன்படுத்தாதோர் தற்போது அதைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.  இதனால், வரும் மாதங்களில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் பல நிறுவனங்கள் தங்களது கட்டண விவரங்களை உயர்த்தி அறிவித்ததும் வருவாய் அதிகரிக்க முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. 

வரும் 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனங்களின் வருவாய்  1 முதல் 6 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் கட்டணங்களை உயர்த்திய நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு குறித்த விவரம் 2020 காலண்டர் ஆண்டில் 9 மாதங்களுக்குப் பிறகே தெரியவரும். தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வருவாய் அதிகரிப்பு விவரம் தெரிய கால தாமதமாகும். 

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி,  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு பகுதி தொகையைச் செலுத்தி சுமையிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளது. 

தற்போதைய ஊரடங்கு உத்தரவால் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் இதர தொழில் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என எதிர்நோக்கி இருக்கும்.  இந்நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனமும் அரசின் சலுகையை எதிர்நோக்கியுள்ளது.   வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாகவுள்ளதால்,  ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது என ஆக்ஸிஸ்  கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com