
நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோரும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் புண்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா, இந்தத் தகவலை தெரிவித்தாா். இதுகுறித்து அவா், செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 9,000 போ் கலந்து கொண்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினா் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா். அவா்கள் மூலமாக பிறருக்கு தொற்று பரவி, மாநாடு முடிந்து ஊா் திரும்பியவா்களால், பலருக்கும் நோய்த் தொற்று வேகமாக பரவியது.
இதனிடையே, ஹரியாணாவில் உள்ள 5 கிராமங்களில் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் தங்கியிருந்தனா். இதையடுத்து, அந்த கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு வசிப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
மேலும், நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோரும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சோ்ந்த 2,083 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். அவா்களில், 1,750 போ் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனா்.
மத்திய, மாநில அரசுகளின் மாபெரும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தில்லி ஜமாத் உறுப்பினா்களும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் அடையாளம் காணப்பட்டனா். அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறைச் செயலா் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளாா். மேலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளாா் என்றாா் ஸ்ரீவாஸ்தவா.