பஞ்சாப்பில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது: முதல்வர் அமரீந்தர் சிங்

ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிப்பது குறித்து தீவிரமாக சிந்தித்து வருவதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது: முதல்வர் அமரீந்தர் சிங்

சண்டீகர்: பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதாகவும், இது மிகப்பெரிய பேராபத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்றும் அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் மாநிலத்தில் நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட 27 பேருக்கும் சமூகத் தொற்று முறையில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் யாரும் வெளிநாடு சென்று வந்தவர்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் சண்டீகரைச் சேர்ந்த ஒரு பெண்மணி மட்டும் கடைகளுக்குச் சென்று வந்துள்ளார். அவர் மூலமாக மற்றவர்களுக்கும் கரோனா பரவியுள்ளது என்று தெரிவித்துள்ளார் முதல்வர். தற்போதைக்கு விவசாயிகளுக்கு மட்டும் ஊரடங்கை தளர்த்துவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் நான் பேசுகையில், 80 - 85 சதவீத இந்தியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாவார்கள் என்றும், இந்தியாவில் இந்த தொற்று செப்டம்பர் மாதத்தில் தீவிரமாகும் என்றும், அப்போது இந்திய மக்கள் தொகையில் 58% பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்ததாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தற்போது காணப்படும் சூழ்நிலை, ஊரடங்கு நடவடிக்கையை விலக்கிக் கொள்வதற்கு சாதகமாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் தற்போதிருக்கும் சூழ்நிலையை மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அவர்கள் அளிக்கும் ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

தற்போதிருக்கும் சூழ்நிலையில், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் ஊரடங்கு நடவடிக்கையை விலக்கிக் கொள்வது என்பது சரியான முடிவாக இருக்காது என்று கூறியிருக்கும் அமரீந்தர் சிங், இந்திய அளவிலும் சரி, உலக அளவிலும் சரி, கரோனா பாதிப்பு ஏற்படுத்தியிருக்கும் போருக்கு நிகரான சூழ்நிலை அடுத்த ஒரு சில மாதங்களுக்கு மிக மோசமான நிலையையே ஏற்படுத்தும் என்று அஞ்சுவதாகவும் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com