
தெலங்கானாவைச் சேர்ந்த தாய் ஒருவர், 1,400 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஊரடங்கால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனை மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவர் ரஸியா பேகம். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சுமார் 1,400 கி.மீ. தூரம் பயணித்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கிக் கொண்ட தனது மகனை மீட்டு வந்துள்ளார்.
ஊரடங்கு நடவடிக்கையால் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட மகனின் நிலையை அறிந்த தாய், உடனடியாக தான் வசித்து வந்த போதன் பகுதி காவல்துறை அதிகாரியிடம் தனது நிலையை விளக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்று மகனை மீட்டு வர அனுமதிக் கடிதம் கோரியுள்ளார்.
தாயின் நிலையை உணர்ந்த காவல்துறையும் அவருக்கு பயண அனுமதிச் சீட்டு வழங்கியதை அடுத்து, இரு சக்கர வாகனத்திலேயே சென்று மகனை மீட்டு வந்துள்ளார்.