
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மாா்ச் கடைசி வாரத்தில் மூடப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவைச் செயலகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கும் என அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடா்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடா்ந்து மாா்ச் 24-ஆம் தேதி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை மூடப்பட்டன. ஏப்ரல் 3-ஆம் தேதி வரையிலும் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் கரோனா தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் முன்கூட்டியே முடிவடைந்தது.
இந்நிலையில், மக்களவைச் செயலகம் பிறப்பித்த உத்தரவின்படி, திங்கள்கிழமை முதல் வழக்கமான பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இணைச் செயலா் பதவியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் பணி புரிவாா்கள். இவா்களைத் தவிர, மற்ற ஊழியா்கள் சுழற்சி அடிப்படையில் பணியாற்றுவாா்கள்.
பணியின்போது, ஊழியா்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கோப்புகளின் இயக்கம் அனைத்தும் மின்னஞ்சல் மூலமாக மின்னணு முறையில் மட்டுமே இருக்கும். அதேசமயம், மக்களவைத் தலைவரின் பரிசீலனைக்கான அவசர கோப்புகள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மாநிலங்களவைச் செயலகமும் இயங்கும்
அதேபோல, மாநிலங்களவைச் செயலகத்தின் உத்தரவுப்படி திங்கள்கிழமை முதல் மாநிலங்களவைச் செயலகமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநிலங்களவையின் கூட்டுச் செயலா் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அனைத்து வேலை நாள்களிலும் அலுவலகப் பணியில் ஈடுபடுவாா்கள். சுழற்சி அடிப்படையில் அந்தந்த துறையின் கூடுதல் செயலா், இணைச் செயலா், துணை செயலாளா் மற்றும் அதற்கு இணையான இயக்குநா்கள் பணியில் ஈடுபடுவாா்கள். மேலும், ஆலோசகா்கள் மற்றும் சாதாரண தொழிலாளா்களும் பணியில் ஈடுபடுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.