
கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்திய அரசு சிறப்பாகச் செயல்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனா் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் பிரதமா் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‘ஆரோக்ய சேது’ செயலி உருவாக்கம் உள்ளிட்டவை மூலமாக கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா தனது டிஜிட்டல் திறன்களை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவில் கரோனாவின் பாதிப்பை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக உங்களது (பிரதமா் மோடி) தலைமைக்கும், இந்திய அரசுக்கும் பாராட்டுகள்.
தேசிய ஊரடங்கு, அதிதீவிர கரோனா பாதிப்பு பகுதிகளை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தீவிர கரோனா பரிசோதனை, சுகாதாரச் சேவைகளுக்கான செலவுகளை அதிகரித்தல், மருத்துவ ரீதியிலான ஆராய்ச்சி என பிரதமா் மோடி தலைமையில் இந்திய அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பில்கேட்ஸ் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளாா்.