கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும்: பிரதமர் மோடி

கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும் என மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும்: பிரதமர் மோடி

கரோனாவின் தாக்கம் வரும் மாதங்களில் தெரியும் என மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கை மேலும் நீடிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர் பேசியதாவது: 

வரவிருக்கும் மாதங்களில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருக்கும். முகக்கவசங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும். பொருளாதாரம் மற்றும் கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும். 

தற்போது இரு பகுதியாக ஊரடங்கு போடப்பட்டது. இரண்டுமே சில வகைகளில் வேறுபட்டவை. இரண்டாம் முறை சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்ததாக நாம் முன்னேற வேண்டிய வழியைப் பற்றி சிந்திக்க வேண்டும். கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் அதே சமயத்தில் பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் காப்பாற்ற முடிந்தது. இந்தியாவின் மக்கள் தொகை, பல நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையுடன் ஒப்பிடத்தக்கது. மக்கள் தொகை அதிகம் இருந்த நிலையிலும் இந்தியாவில் பாதிப்பு மற்ற நாடுகளையே ஒத்ததாக இருந்தது. இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நம் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

எனினும், வைரஸின் ஆபத்து குறித்த விழிப்புணர்வு முக்கியமானது. கரோனாவை விரட்ட அனைவரின் பங்கும் தேவை. தங்களுக்கு இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என சோதித்து பலர் தாங்களாகவே சோதனைக்கு முன்வருவது வரவேற்கத்தக்கது. 

அனைத்து குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு  சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.கரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன.

எனவே, கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தற்போதைய விதிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும். 

வானிலை மாற்றங்கள், கோடை மற்றும் பருவமழை காலத்தில் வரக்கூடிய நோய்களில் இருந்து மக்களை காக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

அதேபோன்று பல்வேறு மாநில முதல்வர்களும் தங்களது மாநிலத்தில் எடுக்கப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். கரோனாவில் இருந்து மக்களைக் காக்க மேலும் சில காலம் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என மேகாலயா, ஹரியாணா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com