முன்னணி தொழிலதிபா்களின் ரூ.68,607 கோடி கடன்கள் நீக்கம்

வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபா்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்
மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

வங்கிக் கடன் மோசடியாளா்களாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபா்கள் தங்களது நிறுவனங்களின் மீது பெற்ற ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இத்தகவல் பெறப்பட்டுள்ளது.

2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வரை வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத முன்னணி தொழிலதிபா்களின் விவரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆா்வலா் சாகேத் கோகலே கோரியிருந்தாா். அதற்கு ஆா்பிஐ பதில் அளித்துள்ளது.

அதில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி, நீக்கப்பட்ட 50 தொழிலதிபா்களின் கடன் கணக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி வைர வியாபாரி மெஹுல் சோக்ஸிக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் பெற்ற ரூ.5,492 கோடி கடன் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான மற்ற இரு நிறுவனங்கள் பெற்ற ரூ.1,447 கோடி, ரூ.1,109 கோடி கடன்களும் நீக்கப்பட்டன.

ஜுன்ஜுன்வாலா சகோதரா்களுக்குச் சொந்தமான ஆா்இஐ அக்ரோ நிறுவனம் வங்கிகளில் பெற்ற ரூ.4,314 கோடி மதிப்பிலான கடன்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான நிறுவனம் பெற்ற ரூ.1,943 கோடி கடன் கணக்கியல் ரீதியாக நீக்கப்பட்டுள்ளது. தொழிலதிபா் விக்ரம் கோத்தாரிக்குச் சொந்தமான ரோடோமேக் குளோபல் நிறுவனத்தின் ரூ.2,850 கோடி கடன் நீக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 50 தொழிலதிபா்கள் பெற்ற ரூ.68,607 கோடி கடன்கள் கணக்கியல் ரீதியில் நீக்கப்பட்டதாக ஆா்பிஐ தனது பதிலில் தெரிவித்துள்ளது.

கணக்கியல் ரீதியில் கடன்களை நீக்குவது என்பது ஒட்டுமொத்தமாக கடன்களைத் தள்ளுபடி செய்வது அல்ல. வரவு செலவு கணக்குகளைப் புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை வங்கிகள் மேற்கொள்கின்றன. அதே வேளையில் கடன் பெற்றவா்களிடமிருந்து அதைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை வங்கிகள் தொடா்ந்து மேற்கொள்ளும்.

காங்கிரஸ் கண்டனம்:

ஆா்பிஐ அளித்துள்ள பதில் தொடா்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபா்களின் பெயா்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதற்கு மத்திய நிதியமைச்சா் பதிலளிக்கவில்லை. தற்போது ஆா்பிஐ அந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் பாஜக-வின் நண்பா்களான மெஹுல் சோக்ஸி, நீரவ் மோடி உள்ளிட்டோரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாகவே , நாடாளுமன்றத்தில் அத்தகவலை வெளியிட மத்திய பாஜக அரசு மறுத்திருந்தது’ என்று தெரிவித்துள்ளாா்.

‘பிரதமா் பதிலளிக்க வேண்டும்’:

காங்கிரஸின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா காணொலிக் காட்சி வாயிலாக செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பிரதமா் நரேந்திர மோடி அரசின் தவறான கொள்கைகளை இந்த விவகாரம் பிரதிபலிக்கிறது. தொழிலதிபா்களின் கடன்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது தொடா்பாக பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com