

பாடச்சுமை குறைப்பு, மனப்பாடம் முறை ஒழிப்பு, தாய்மொழியில் கல்வி போன்றவை புதிய கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இரண்டு நாள்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கை மூலம் மாணவர்களின் கல்விச் சுமை மட்டுமல்ல, பொதி மூட்டை போல புத்தகப் பையை சுமந்து செல்வதும் குறைக்கப்படுகிறது. நமது நாட்டில் மொழிப்பாடம் என்பது உணர்ச்சிப்பூர்வமானது என்பதால் அதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை தேடாமல், வேலை வாய்ப்பை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே நோக்கம். 21-ஆம் நூற்றாண்டில் இளைஞர்களின் எதிர்காலத்தை கவனத்தில் வைத்தே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கல்வி முறையில் உள்ளது போன்று வெறுமனே படிப்பை மனப்பாடம் செய்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கிவிடாது. தாய்மொழி மூலம் மாணவர்கள் படித்து புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். 21ஆம் நுற்றாண்டு அறிவின் யுகம். எனவே, இந்தியாவில் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது கல்வி முறையை அதிநவீன முறையாக்குவதற்காக முன்னுரிமை முயற்சிக்கப்படுகிறது.
மாணவர்கள் அதி நவீன கல்வியைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்திய மாணவர்களின் எதிர்காலத்துக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவின் கல்வியின் தரத்தை உயர்த்த புதிய கல்விக் கொள்கை உதவும். புதிய கல்விக் கொள்கை மூலம், நமது கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.