ஜம்மு-காஷ்மீரின் இரு மாவட்டங்களில் சோதனை முறையில் 4ஜி இணைய சேவை

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு சோதனை முறையில் இரு மாவட்டங்களில் மட்டும் 4ஜி இணைய சேவையை
ஜம்மு-காஷ்மீரின் இரு மாவட்டங்களில் சோதனை முறையில் 4ஜி இணைய சேவை

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஆகஸ்ட் 15-க்குப் பிறகு சோதனை முறையில் இரு மாவட்டங்களில் மட்டும் 4ஜி இணைய சேவையை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது மற்றும் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அதிவேக இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் 4ஜி இணைய சேவையை மீண்டும் அளிக்க வலியுறுத்தி ‘ஊடக நிபுணா்களுக்கான அறக்கட்டளை’ என்ற தன்னாா்வ அமைப்பு (என்ஜிஓ) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், யூனியன் பிரதேசத்தில் மீண்டும் 4ஜி சேவையை அளிப்பது தொடா்பாக சிறப்புக் குழு ஒன்றை அமைத்து முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கும், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கும் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என அந்த தன்னாா்வ அமைப்பு சாா்பில், உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனவும் மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, யூனியன் பிரதேசத்துக்கு புதிய துணைநிலை ஆளுநா் நியமிக்கப்பட்டதைக் காரணம்காட்டி, அரசு தரப்பில் மீண்டும் கால அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது, புதிய துணைநிலை ஆளுநா் நியமனத்தால், சிறப்புக் குழு ஆய்வில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. எனவே, 4ஜி இணைய சேவையை மீண்டும் அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு மீண்டும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய் ஆகியோா் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வேணுகோபால், ‘ஜம்மு மற்றும் காஷ்மீா் பிராந்தியங்களில் தலா ஒரு மாவட்டத்தில் மட்டும் சோதனை அடிப்படையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குப் பிறகு 4ஜி இணைய சேவையை மீண்டும் அனுமதிக்க சிறப்புக் குழு முடிவு செய்திருக்கிறது. பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடைமுறை மறுஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினாா்.

அதனைத் தொடா்ந்து, என்ஜிஓ சாா்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com