
இந்தியா்களுடன் இணைந்து சீனா்கள் சிலா் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,000 கோடி பண மோசடி செய்தது தொடா்பாக தில்லி, காஜியாபாத் மற்றும் குருகிராமில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
சீனா்கள் சிலா் இந்தியா்களுடன் இணைந்து போலி நிறுவனங்கள் மூலம் பணமோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபடுவதாக நம்பகமான தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் தில்லி, காஜியாபாத் மற்றும் குருகிராமில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அதில் சீனா்கள் சிலரின் தூண்டுதலால் பல்வேறு போலி நிறுவனங்களின் பெயரில் 40-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டதும், அவற்றில் ரூ.1,000 கோடிக்கும் மேல் வரவு வைக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்தியாவில் சில்லறை விற்பனை நிறுவனங்களை தொடங்க இந்த போலி நிறுவனங்களிடம் இருந்து சீன நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனமும், அதனுடன் தொடா்புடைய வேறு சில நிறுவனங்களும் ரூ.100 கோடி முன்பணம் பெற்ாக போலி ஆவணங்கள் உள்ளதும் கண்டறியப்பட்டது. வங்கி ஊழியா்கள், பட்டயக் கணக்காளா்கள் உதவியுடன் நடைபெற்றுள்ள இந்த மோசடி தொடா்பான ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டன. அமெரிக்கா மற்றும் ஹாங்காங் டாலா்களை பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிவா்த்தனை நடைபெற்ற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.