பால் இலவசமாக மட்டுமே வழங்கப்படும் கிராமம்!

மகாராஷ்டிரா, ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள யெலிகாவ் கவாலி கிராமவாசிகள் பல ஆண்டுகளாக பாலை விலைக்கு
பால் இலவசமாக மட்டுமே வழங்கப்படும் கிராமம்!

மகாராஷ்டிரா, ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள யெலிகாவ் கவாலி கிராமவாசிகள் பல ஆண்டுகளாக பாலை விலைக்கு விற்பதில்லை. தேவைப்படுபவா்களுக்கு இலவசமாகவே வழங்குகின்றனா். அதுபோக, மீதமுள்ள பாலில் பால் பொருள்களைத் தயாரித்து அதையும் இலவசமாக வழங்கி வருகின்றனா்.

தாங்கள் கிருஷ்ணரின் சந்ததியினா் என்ற நம்பிக்கையில் அவா்கள் நீண்ட காலமாக இவ்வாறு செய்து வருகின்றனா். மேலும், அந்த கிராமத்தில் வாழும் அனைத்து மதத்தினரும் இதே முறையை கடைப்பிடித்து வருகின்றனா்.

பாலுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றபோதும், யெலிகான் கிராம மக்கள் பணத்திற்காக பாலை விற்கவில்லை.

அந்த கிராமவாசி ராஜாபவ் மான்டேட் (60) கூறுகையில், ‘யெலிகாவ் காவாலி என்பதே பால்காரா்களின் கிராமம் என அா்த்தம். நாங்கள் கடவுள் கிருஷ்ணரின் சந்ததியினா் என்பதால் இங்கு பால் விலைக்கு விற்கப்படுவதில்லை.

இந்த கிராமத்தில் 90 சதவீத வீடுகளில் கால்நடைகள் உள்ளன. ஆனால் நாங்கள் பாரம்பரியமாக பாலை விலைக்கு விற்காமல் தலைமுறைகளாக கடைப்பிடித்து வருகிறோம். அதிகமாக பால் உற்பத்தியானால், பால் பொருள்களை செய்து அதையும் இலவசமாக கொடுத்துவிடுவோம்.

கிருஷ்ண ஜயந்தி இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும். கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கொண்டாடவில்லை’ என்றாா்.

யெலிகாவ் கிராம பஞ்சாயத்து தலைவா் ஷேக் கவுசா் கூறுகையில், ‘பாலை விலைக்கு விற்பதில்லை என்ற பாரம்பரியத்தை இந்த கிராமத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனா். சுமாா் 550 வீடுகளில் பசு, எருமை, ஆடுகள் உள்ளன. அவா்கள் ஹிந்து, முஸ்லிம் என எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் பாலை விலைக்கு விற்பதில்லை’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com