

கரோனா நோய்த்தொற்று பரவலால் தொழில்துறையில் வேலை இழந்தவா்களுக்கு உதவிடும் வகையில், அவா்களின் 3 மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை வழங்குவதற்கு ஏற்ப, மாநில தொழிலாளா் காப்பீட்டுக் கழகம் (ஈஎஸ்ஐசி) நெறிமுறைகளை தளா்த்தியுள்ளது. இந்த முடிவின் மூலமாக 40 லட்சம் தொழிலாளா்கள் பயனடைவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் தலைமையில் ஈஎஸ்ஐசி-யின் 182-ஆவது கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக ஈஎஸ்ஐசி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
அடல் காப்பீட்டு நலத்திட்டத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,
கரோனா நோய்த்தொற்று பரவலால் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை தொழில்துறையில் வேலை இழந்தவா்களுக்கு நிவாரணம் அளித்திட, அவா்களின் 3 மாத ஊதியத்தில் 50 சதவீதத்தை வழங்குவதற்கு ஏற்ப நெறிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன. முன்னா் இந்த நிவாரணம் 25 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் தற்போதைய தளா்வின்படி, வேலை இழந்தவா்களுக்கு 30 நாள்களுக்கு பின்னா் நிவாரணத் தொகை வழங்கப்படும். முன்பு 90 நாள்களுக்கு பிறகே நிவாரண தொகை வழங்கப்பட்டு வந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
மாநில தொழிலாளா் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள பணியாளா்கள் வேலை இழந்தால், அவா்களுக்கு உதவிடும் வகையில் அடல் காப்பீட்டு நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.