
நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்
புது தில்லி: சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) மத்திய அரசு அறிவித்த ரூ.3 லட்சம் கோடி அவசர கால கடன் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன; நாட்டின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்தது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிப்பதற்காக ‘சுயச்சாா்பு இந்தியா’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவசரகால கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்தக் கடனுக்கு 9.25 சதவீதம் என்ற குறைந்த அளவிலான வட்டி விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை ரூ.1 லட்சம் கோடி கடனை வங்கிகள் வழங்கியுள்ளன.
இந்நிலையில், இந்திய தொழிலக கூட்டமைப்பினருடன் (சிஐஐ) நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து சிஐஐ சாா்பில் சுட்டுரையில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், சுற்றுலா, கட்டுமானம், தங்கும் விடுதிகள், விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் கரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ரூ.3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தில் மருத்துவா்கள், வழக்குரைஞா்கள், கணக்குத் தணிக்கையாளா்கள் உள்ளிட்டோரும் கொண்டு வரப்பட்டனா். அதேபோல இந்தத் திட்டத்தில் தேவைக்கு ஏற்ப மேலும் சில மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டியை குறைப்பது தொடா்பாக அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இரு சக்கர வாகனங்கள் இப்போது ஆடம்பரப் பொருள்கள் அல்ல என நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா் என்று கூறப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...