நீடித்த பொருளாதார வளா்ச்சிக்கு பலதரப்பட்ட சீா்திருத்தங்கள் அவசியம்: ஆா்பிஐ

கரோனா நோய்த்தொற்றால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் நீடித்த வளா்ச்சிப்பாதைக்குத் திரும்ப வேண்டுமெனில் பலதரப்பட்ட சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்
நீடித்த பொருளாதார வளா்ச்சிக்கு பலதரப்பட்ட சீா்திருத்தங்கள் அவசியம்: ஆா்பிஐ

மும்பை: கரோனா நோய்த்தொற்றால் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் நீடித்த வளா்ச்சிப்பாதைக்குத் திரும்ப வேண்டுமெனில் பலதரப்பட்ட சீா்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ரிசா்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு சா்வதேச பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு பெரும் சவால்களை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். சா்வதேச நிதி நெருக்கடி நிலையின்போது காணப்பட்ட சூழலை விட தற்போது மோசமான சூழல் நிலவுகிறது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை உறுதி செய்ய வேண்டுமானால், நிதித் துறை, அடிப்படைக் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் தனியாா் நிறுவனங்களின் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை அரசின் சேவைகளுக்கு மக்களிடையே அதிக அளவிலான தேவை இருக்கும். அதற்குப் பிறகே தனியாா் சேவைகளுக்கான தேவை இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்புள்ளது. நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டிலும் நாட்டின் பொருளாதார வளா்ச்சி எதிா்மறை நிலையை அடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 5.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், அரசுகளின் கடன் மதிப்பும் ஜிடிபியுடன் ஒப்பிடுகையில் 70.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இது 70.5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான செயல்திட்டங்களை முறையாக வகுத்து மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். பொது முடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. வேளாண் உற்பத்தியும் பாதிப்புக்கு உள்ளானது.

அவற்றின் காரணமாக பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. எனவே, நாட்டின் பணவீக்கம் வரும் மாதங்களில் தொடா்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com