
பிரணாப் முகா்ஜியின் சிறுநீரக செயல்பாடுகளில் சிறிய மாற்றம்: ராணுவ மருத்துவமனை
புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) ஆழ்ந்த கோமாவில் இருப்பதாகவும், சிறுநீரக செயல்பாடுகளில் லேசான மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் ராணுவ மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். மூளையில் உறைந்திருந்த ரத்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவா் ஆழ்ந்த மயக்க நிலைக்கு (கோமா) சென்றாா். ராணுவ மருத்துவமனையில் அவா் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டபோது பிரணாபுக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியானது.
இந்த நிலையில், அவரது நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முதல் அவரது சிறுநீரக செயல்பாடுகளில் லேசான மாறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த மயக்கநிலையில், செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருவதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...