கட்சித் தலைமைக்கு சவால் விடவில்லை: சோனியாவுக்கு கடிதம் எழுதியவர்கள் கருத்து

"நாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல, கட்சித் தலைமைக்கு சவால் விடவில்லை' என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைமைக்கு சவால் விடவில்லை: சோனியாவுக்கு கடிதம் எழுதியவர்கள் கருத்து


புது தில்லி: "நாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல, கட்சித் தலைமைக்கு சவால் விடவில்லை' என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதியவர்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கட்சித் தலைமை தொடர்பாக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இடையே இருவேறு கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து, கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் என்றும், தலைமை மாற்றம் தேவை என்றும் கபில் சிபல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு அண்மையில் கடிதம் எழுதினர். இதையடுத்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக சோனியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழ்நிலையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. 

அப்போது கடிதம் எழுதியவர்களுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியாவே தொடர்வார் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில், 23 பேர் குழுவைச் சேர்ந்த சிலர், தாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல, கட்சித் தலைமைக்கு சவால் விடவில்லை, கட்சியின் மறுமலர்ச்சியை ஆதரிப்பவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

கட்சித்  தலைமைக்கு சவால் விடுத்து கடிதம் எழுதவில்லை; இது கட்சியை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்று விவேக் தங்கா எம்.பி. சுட்டுரையில் கூறியுள்ளார்.

நாங்கள் கடிதம் எழுதியதை குற்றமாகக் கருத வேண்டியதில்லை; அப்படி நினைப்பவர்கள் நாங்கள் எழுப்பிய பிரச்னை பரிசீலனைக்குரியது என்பதை விரைவில் உணருவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தனக்குத் திருப்தி அளிப்பதாக மற்றொரு தலைவர் தெரிவித்துள்ளார். நாங்கள் கட்சியைப் பலப்படுத்துவதற்காகவே உழைக்கிறோம்; யாருக்கும் எதிராக செயல்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

23 பேர் குழுவைச் சேர்ந்த மேலும் சில உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், சசி தரூர், ஆனந்த் சர்மா, பி. ஜே. குரியன், ரேணுகா செüத்ரி, மிலிந்த் தேவ்ரா, அஜய் சிங், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் அடங்குவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com