திருவனந்தபுரம் விமான நிலையம் தனியாருக்கு குத்தகை: தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றம்


கொச்சி: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க கேரள உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக, கேரள அரசு தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த  நீதிமன்றம், இந்த வழக்கை விரிவான விசாரணைக்காக ஒத்திவைத்தது.

மேலும், வரும் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி அரசுக்கு  உத்தரவிட்ட அமர்வு, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது.  
அரசு தாக்கல் செய்த மனுவில்,  தனியார்மயமாக்கலுக்கு தடை விதிக்காவிட்டால், பின்னர் அது ஆறாத வடுவாகவும், பல்வேறு இன்னல்களையும் ஏற்படுத்தும் என்று வாதிடப்பட்டிருந்தது. 

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட கடந்த வாரம் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை திரும்பப் பெறக் கோரி, கேரளத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மான நகலும் உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

ஏற்கெனவே, இது தொடர்பான முடிவுகளை மத்திய அரசு கடந்த ஆண்டு எடுத்தபோது, அதற்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த  உயர்நீதிமன்றம், இது அரசியலமைப்பின் 226-ஆவது பிரிவின் கீழ் பொருந்தாது என கூறியது. இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.
அப்போது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மனு மீதான தகுதி குறித்து முடிவெடுப்பதற்காக வழக்கை மீண்டும் ஒத்திவைத்தது. 

இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து மாநில அரசு குறிப்பிடுகையில், "திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை இயக்குதல், நிர்வகித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பாக அதானி நிறுவனத்திற்கு குத்தகை விடும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இதுதொடர்பான ரிட் மனு தள்ளுபடி செய்யப்படக் கூடாது' எனக் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com