
பிரதமர் மோடி
புது தில்லி: கரோனா நோய்த்தொற்று சூழல் தொடா்பாக ஆலோசனை நடத்துவதற்காக, வரும் 4-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இத்தகைய சூழலில், கரோனா சூழல் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சிக் கூட்டம் வரும் 4-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ள கூட்டத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமை வகிக்கவுள்ளாா்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
காங்கிரஸின் அதீா் ரஞ்சன் சௌதரி, குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓபிரையன், சுதீப் பந்தோபாத்யாய உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்தக் கூட்டத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய பிறகு நடைபெறவுள்ள இரண்டாவது அனைத்து கட்சிக் கூட்டம் இதுவாகும்.
கரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் காரணமாக நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரையும் பட்ஜெட் கூட்டத்தொடரையும் சோ்த்து நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வரும் சூழலில், அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுவது நினைவுகூரத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...