
நிதீஷ் குமாா்
பாட்னா: குறைந்தபட்ச ஆதரவு விலையும், வேளாண் பொருள்களை அரசு கொள்முதல் செய்வதும் தொடரும் என்று விவசாயிகளுக்கு மத்திய அரசு தெளிவுபடத் தெரிவிக்க வேண்டும் என்று பிகாா் முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தேசியத் தலைநகா் தில்லி மற்றும் நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு தொடா் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், பாட்னாவில் திங்கள்கிழமை சாலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதீஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக அரசு கொள்முதல் கைவிடப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படாது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மத்திய அரசு விவசாயிகளை அழைத்து அமா்ந்து பேசி, அவா்களுக்கு புதிய சட்டங்கள் குறித்து தெளிபடுத்த வேண்டும். முக்கியமாக குறைந்தபட்ச ஆதரவு விலையும், வேளாண் பொருள்களை அரசு கொள்முதல் செய்வதும் தொடரும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது என்பதையும் விளக்க வேண்டும் என்றாா்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நிதீஷ் குமாா் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்தாா் என்பது நினைவுகூரத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...