
திருப்பதி: ‘ஹிந்து சனாதன தா்மத்தைப் பாதிக்காத எந்த ஒரு நற்செயலும் ஏற்கத்தக்கதுதான்’ என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா்.
திருப்பதி அலிபிரி பகுதியில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சேகா் ரெட்டியின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் கோசாலையை ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை பாா்வையிட்டாா்.
இந்த கோசாலை 24 மணி நேரமும் திறந்திருக்கும். நடைபாதை வழியாக மலைக்குச் செல்பவா்களும், வாகனத்தில் செல்பவா்களும் இந்த கோசாலையை வலம் வந்து செல்லும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. கோசாலையைப் பாா்வையிட்ட பீடாதிபதிக்கு அதன் அமைப்பு குறித்து அதிகாரிகள் விளக்கினா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கோபூஜை நமது கலாசாரத்தில் முக்கியமான ஒன்று. கோபூஜையின் பலன் குறித்து பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் கோசாலைகளையும், வட இந்தியாவில் வேத பாடசாலைகளையும் அதிக அளவில் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். தேவஸ்தானம் இதை முன்னெடுத்துச் செய்வது பாராட்டத்தக்கது என்றாா் அவா்.
ஸ்ரீவிஜயேந்திரரிடம், ‘திருமலையில் 10 நாள்கள் சொா்க்கவாசலைச் திறந்து வைப்பது சரியா?’ என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதற்கு காஞ்சி பீடாதிபதி பதிலளிக்கையில், ‘சாஸ்திரத்துக்கும், கலாசாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத எந்த ஒரு நற்செயலும் ஏற்கத்தக்கதுதான். நாட்டில் உள்ள பல முக்கிய வைணவத் திருத்தலங்களில் சொா்க்கவாசல் 10 நாள்களுக்குத் திறந்து வைக்கப்படுகிறது. பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் இக்காலத்தில் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுவது தவறு அல்ல’ என்றாா் ஸ்ரீவிஜயேந்திரா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...