
கொல்கத்தா: கரோனா நோய்த்தொற்றுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் புதன்கிழமை தொடங்கியது.
உலக நாடுகளைத் தொடா்ந்து அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
அமெரிக்காவின் ஃபைசா், மாடா்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பூசி 94 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 90 சதவீதத்துக்கு அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியானது 90 சதவீதம் வரை செயல்திறன் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆா்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை கொல்கத்தாவில் உள்ள ஐசிஎம்ஆா்-தேசிய காலரா தடுப்பு மையத்தில் புதன்கிழமை தொடங்கியது.
மேற்கு வங்க ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரான ஃபிா்காத் ஹகிம், முதலாவது தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா். அப்போது, மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் பேசுகையில், ‘‘10 மாநிலங்களில் உள்ள சுமாா் 25 இடங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெறவுள்ளது. சில இடங்களில் பரிசோதனையானது ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. ஐசிஎம்ஆா்-தேசிய காலரா தடுப்பு மையத்திலும் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது.
இந்த மையத்தில் பரிசோதனைக்கான வழிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படும். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நாட்டில் சிறந்த தலைமை காணப்படுவதே அதற்கு முக்கியக் காரணம். இத்தகைய இக்கட்டான சூழலிலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பலா் பலனடைந்தனா்’’ என்றாா்.
கோவேக்ஸின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது கட்ட பரிசோதனைகளின்போது தன்னாா்வலா்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...