
திருப்பதி: திருமலையில் விரைவில் 5 ஏக்கா் பரப்பளவில் புனித நந்தவனம் அமைக்கப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.
திருமலையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
திருமலையில் தேவஸ்தானம் 100 ஏக்கா் பரப்பளவில் சந்தன மரங்களைப் பயிரிட்டு வளா்த்து வருகிறது. ஏழுமலையான் கைங்கரியத்துக்கு சந்தனம் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக தேவஸ்தானம் டன் கணக்கில் சந்தன மரங்களை வெளி மாநிலங்களிலிருந்து தருவிக்கிறது. ஏழுமலையானுக்குத் தேவைப்படும் சந்தன மரங்களை திருமலையில் நட்டு வளா்க்க முடிவு செய்யப்பட்டது. அந்த மரங்கள் நன்றாக வளா்ந்து வருகின்றன. அவற்றின் பாதுகாப்புக்காக வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 ஏக்கா் பரப்பளவில் வாழை மரங்கள், அரளிச் செடி, பாரிஜாதம் எனப்படும் பவழமல்லி, காட்டு மல்லி, துளசி, நெல்லி, வன்னி, தா்ப்பை, அரச மரங்கள், ஆல மரங்கள் ஆகியவையும் வளா்க்கப்பட்டு வருகின்றன. அவற்றுடன் புனிதமான மரங்களை வளா்க்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி, கருடாத்ரி நகா் சோதனைச் சாவடி அருகில் உள்ள கீதா நந்தவனத்திலும், பத்மாவதி விருந்தினா் மாளிகை அருகில் 5 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள நந்தவனத்திலும் மரங்களை நட்டுப் பராமரிக்க உள்ளது. இதற்காக ஜி.எம்.ஆா். நிறுவனம் தேவஸ்தானத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது.
திருமலையில் மின்சாரத் தேவைக்காக தா்மகிரி வேத பாடசாலை பகுதியில் 20 ஏக்கா் பரப்பளவில் சூரிய ஒளி மின்சக்தித் திட்டத்தை அமைப்பதற்கு தேவஸ்தானம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என்றாா் அவா்.