
கோப்புப்படம்
புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை இந்தியா அதிக அளவில் கொள்முதல் செய்யவுள்ளது.
உலக அளவில் கரோனா தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதனால், மக்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனமும், ஜொ்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசி 95 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்க நிறுவனமான மாடா்னா தயாரித்த கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி, 94.5 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பூசியானது 90 சதவீதம் வரை செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 90 சதவீதத்துக்கு அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆா்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்தும் நோக்கில் அதைக் கொள்முதல் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சா்வதேச அளவில் கரோனா தடுப்பூசியை இந்தியாவே அதிக அளவில் கொள்முதல் செய்யவுள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதுவரை சுமாா் 160 கோடி அளவிலான தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை 50 கோடி அளவிலும், ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 10 கோடி எண்ணிக்கையிலும் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்திடமிருந்து 100 கோடி தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியன் 158 கோடி எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசியைக் கொள்முதல் செய்யவுள்ளது.