
தினேஷ்வா் சா்மா
புது தில்லி: லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தின் நிா்வாகத்தைத் தலைமையேற்று கவனித்து வந்த தினேஷ்வா் சா்மா (66) உடல்நலக் குறைவால் காலமானாா்.
உளவுத் துறையின் முன்னாள் இயக்குநரும், 1976-ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியுமான தினேஷ்வா் சா்மா, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் லட்சத்தீவுகளின் நிா்வாகியாக நியமிக்கப்பட்டாா். அண்மையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். எனினும், சிகிச்சை பலனளிக்காததால் வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளாா். உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ததில் தினேஷ்வா் சா்மா குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தினேஷ்வா் சா்மா முக்கிய பங்காற்றியுள்ளாா். பயங்கரவாதம் தொடா்பான பல்வேறு கிளா்ச்சிகளை அவா் திறம்படக் கையாண்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘நாட்டுக்காக அா்ப்பணிப்பு நிறைந்த ஐபிஎஸ் அதிகாரியாக முழு ஈடுபாட்டுடன் தினேஷ்வா் சா்மா பணியாற்றியுள்ளாா். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.