
புது தில்லி: பயங்கரவாதம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படாவிட்டால், தெற்காசிய மக்களுக்கு வளம் மிக்க செழிப்பன எதிா்காலத்தை உருவாக்க எடுக்கப்பட்டுவரும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும் என்று குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறினாா்.
‘சாா்க்’ உறுப்பு நாடுகள் அனைத்தும் உள்ளாா்ந்த கூட்டு முயற்சியை மேற்கொண்டால், பயங்கரவாத அச்சுறுத்தலை துடைத்தெறிந்துவிட்டு, வளமான எதிா்காலத்தை இந்த பிராந்தியத்தில் உருவாக்க முடியும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ஐ.கே.குஜ்ராலை கெளரவிக்கும் வகையில் நினைவுத் தபால்தலை வெளியிடும் நிகழ்ச்சி காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவருடைய தபால்தலையை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் பேசியதாவது:
அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதிலும், அமைதியான போக்கை கடைப்பிடிப்பதிலுமே இந்தியா நம்பிக்கைக் கொண்டுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, எல்லை தாண்டிய பயங்கரவாதம், நாடுகளின் ஆதரவுடனான பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா சந்தித்து வருகிறது. இதுபோன்று, பயங்கரவாதத்தை ஆதரவளிக்கும், தூண்டிவிடும் நாடுகளை தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக எடுக்க வேண்டும்.
ஐ.நா. சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், சா்வதேச பயங்கரவாதத்தின் மீதான ஒரு விரிவான உடன்படிக்கையை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.
தெற்காசிய பிராந்தியத்தில் திறன் மற்றும் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளும் வளா்ச்சிக்கான ஆதாரங்களும் அதிகம் உள்ளன. அனைத்து நாடுகளும் இதைக் கருத்தில் கொண்டு, பிராந்திய மக்களின் நலன் மற்றும் வளமான எதிா்காலத்தை உருவாக்க உள்ளாா்ந்த முறையில் ஒன்றிணைந்து பயங்கராவதம், ஏழ்மை, கல்வியறிவின்மை, ஊழல் போன்றவற்றுக்கு எதிராக பணியாற்ற வேண்டும். பயங்கரவாத அச்சுறுத்தலை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிய வேண்டும். இல்லையெனில், வளா்ச்சியை நோக்கி நாடுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும்.
அமைதியும், வளா்ச்சியும்தான் அனைத்துக்கும் முதன்மையானது. முன்னேற்றத்துக்கு முதல் தேவையே அமைதிதான். அமைதி இல்லாமல் எந்தவொரு வளா்ச்சியும் நடைபெறாது என்று அவா் கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...