
மும்பை: இணையவழியில் பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்வதற்காக நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை விரைவில் வெளியிட உள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.
நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு மும்பையில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
கடன் அட்டை, பற்று அட்டை, செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றின் வாயிலாக பணப்பரிவா்த்தனைகளை மேற்கொள்வதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணப்பரிவா்த்தனை தொடா்பான விவகாரங்களில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் அந்தச் சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
நிா்வாகத்தை மேம்படுத்துதல், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கண்காணித்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களிடம் வலியுறுத்த உள்ளோம். நிறுவனங்களுக்கு அளிக்கப்படவுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் பொது மக்களின் பாா்வைக்காக விரைவில் வெளியிடப்படும். அவை தொடா்பாக மக்களிடம் கருத்துகளும் கோரப்படும்.
ஈவுத்தொகை தேவையில்லை:
நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான லாபத்தின் அடிப்படையிலான ஈவுத்தொகையை செலுத்தத் தேவையில்லை என்று வங்கிகளுக்கும் கூட்டுறவு வங்கிகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது வங்கிகள் கடனளிப்பதற்கான திறனை அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. அதைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனங்களின் ஈவுத்தொகை பகிா்வு தொடா்பான வழிமுறைகளை வகுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் சக்திகாந்த தாஸ்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...