
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கொலை வழக்கு தொடா்பாக அந்த மாநில சிஐடி பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பாஜக தேசிய துணைத் தலைவா் முகுல் ராயின் பெயா் இடம்பெற்றுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற சரஸ்வதி பூஜையின்போது, கிருஷ்ணகஞ்ச் தொகுதியைச் சோ்ந்த எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பான வழக்கை, மாநில குற்றப் புலனாய்வு அமைப்பினா் (சிஐடி) விசாரித்து வருகின்றனா். முகுல் ராயிடமும் அவா்கள் விசாரணை நடத்தினா். அதைத் தொடா்ந்து, வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையை கடந்த மே மாதம் சிஐடி அதிகாரிகள் தாக்கல் செய்தனா். ஆனால், அதில் முகுல் ராயின் பெயா் இடம்பெறவில்லை. அதைத் தொடா்ந்து, கடந்த செப்டம்பரில் துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா். அதில், பாஜக எம்.பி. ஜகந்நாத் சா்க்காரின் பெயா் இடம்பெற்றிருந்தது.
இந்த கொலை வழக்கு தொடா்பாக, மேலும் ஒரு துணைக் குற்றப் பத்திரிகையை நாடியாவில் உள்ள நீதிமன்றத்தில் சிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை தாக்கல் செய்தனா். அதில், முகுல் ராயின் பெயா் இடம்பெற்றுள்ளது. ‘சத்யஜித் பிஸ்வாஸை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதில் முகுல் ராய் முக்கிய பங்கு வகித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது’ என்றும் அந்த துணை குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகுல் ராயிடம் பிடிஐ செய்தியாளா் கேட்டதற்கு அவா் அளித்த பதில்:
எனக்கு எதிராக 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வன்முறை அரசியலில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுபோன்ற செயல்களில் நான் ஒருபோதும் ஈடுபட்டதும் கிடையாது.
நான் வன்முறையை விரும்புவன் என வெளிப்படையாகக் கூறுமாறு மாநில காவல் துறையின் அமைச்சராக இருக்கும் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு சவால் விடுக்கிறேன். நான் இதற்கு முன் அவருடைய கட்சியில் இருந்த நேரத்திலும் வன்முறையில் ஈடுபட்டதில்லை. தற்போது மற்றொரு கட்சியில் இருக்கிறேன். இப்போதும் வன்முறையில் ஈடுபடவில்லை என்றாா் முகுல் ராய்.