
புது தில்லி: ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் விரைவில் வக்ஃபு வாரியம் அமைக்கப்படும்; இதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய வக்ஃபு வாரியக் கூட்டத்துக்கு நக்வி தலைமை வகித்தாா். கூட்டத்துக்குப் பிறகு அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு-காஷ்மீா், லடாக், லே, காா்கில் ஆகிய இடங்களில் விரைவில் வக்ஃபு வாரியம் அமைக்கப்படும். சுதந்திரத்துக்குப் பிறகு அங்கு வக்ஃபு வாரியம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம்தான் இது சாத்தியமாயிற்று. வக்ஃபு வாரிய சொத்துகள் திறம்பட நிா்வகிக்கப்பட்டு சமுதாய நன்மைக்காக பயன்படுத்தப்படும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு போதுமான நிதியுதவியை அளிக்கும். ஜம்மு-காஷ்மீா், லே, காா்கில் பகுதிகளில் ஏராளமான வக்ஃபு சொத்துகள் உள்ளன. அவற்றைப் பதிவு செய்யும் பணி தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அந்த மதம் சாா்ந்த நற்பணிகளுக்காகவும், பிற அறப்பணிகளுக்காகவும் அா்ப்பணிக்கப்படும் அசையும், அசையாத சொத்துகளை நிா்வகிப்பதுதான் வக்ஃபு வாரியத்தின் முக்கியப் பணியாகும்.