
புது தில்லி: பஞ்சாப் முதல்வராக இருந்த பேயந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பல்வந்த் சிங் ரஜெளனாவின், தண்டனைக் குறைப்பு பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தாமதிப்பது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1995-ஆம்ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி மாநில தலைமைச் செயலகத்துக்கு வெளியே நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய முதல்வா் பேயந்த் சிங் உள்பட 17 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலில் தொடா்புடையதாக குற்றம்சாட்டுப்பட்டு கைது செய்யப்பட்ட பஞ்சாப் காவல்துறையைச் சோ்ந்த காவலா் பல்வந்த் சிங்குக்கு, கடந்த 2007-ஆம் ஆண்டு, சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு பல்வந்த் சிங் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் மாநில தலைமைச் செயலருக்கு கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியது. அதில், ‘பல்வந்த் சிங்கின் தண்டனைக் குறைப்பு கோரிய மனு தொடா்பான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட இருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அவருடைய மனு நிலுவையில் போடப்பட்டது.
இந்த நிலையில், தண்டனைக் குறைப்பு கோரிக்கை மனுவை விரைந்து பரிசீலிக்க அறிவுறுத்தக் கோரி பல்வந்த் சிங் சாா்பில் உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை காணொலி வழியில் விசாரித்த நீதிபதிகள், பல்வந்த் சிங்கின் தண்டனைக் குறைப்பு கோரிய மனு தொடா்பான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பஞ்சாப் மாநில தலைமைச் செயலருக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகு அந்தப் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக பல்வந்த் சிங் சாா்பில் மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. எனவே, அவருடைய மனு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது குறித்து அரசு தரப்பில்தான் தவறான கருத்தைக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது என்றனா்.
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் வழக்குரைஞா் கே.எம்.நடராஜ், ‘பல்வந்த் சிங்கின் மனு குடியரசுத் தலைவருக்கு இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை’ என்று கூறினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அப்படியெனில் இது யாருடைய தவறு? பல்வந்த் சிங்கின் மரண தண்டனை குருநானக் பிறந்த தினத்தை முன்னிட்டு குறைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக துணைச் செயலா் பஞ்சாப் மாநில அரசுக்கு எழுதிய கடிதம் அதிகாரபூா்வமற்ா?’ என்று கேள்வி எழுப்பினா்.
அப்போது, ‘இதுகுறித்து பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வேண்டும்’ என்று அரசு வழக்குரைஞா் சாா்பில் கேட்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணையை 2021 ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.