
கோப்புப்படம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு நிலைபாட்டை எடுக்கவுள்ளதாக சரத் பவார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான நாடு தழுவிய பொது முடக்கத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை (புதன்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திக்கின்றனர்.
இதுபற்றி சரத் பவார் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்திப்பதற்கு முன்பாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக வெவ்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு முடிவு எடுக்கவுள்ளோம். குடியரசுத் தலைவரிடம் எங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்" என்றார்.
இதனிடையே சீதாராம் யெச்சூரி தெரிவிக்கையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு பட்டியலில் ராகுல் காந்தி, சரத் பவார் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்" என்றார் யெச்சூரி.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 13 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...