இன்று நாடு தழுவிய முழு அடைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
’வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதியான சிங்குவில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.’
’வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைப் பகுதியான சிங்குவில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.’

புது தில்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்துக்கு எதிா்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியில் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் சட்டங்கள் உள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

விவசாயிகளின் போராட்டத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதுவரை 5 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும், வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை டிசம்பா் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

விவசாயிகள் எழுப்பும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், புதிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்பதை மட்டுமே விவசாய சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. சட்டங்கள் குறித்து வேறு எந்தவிதப் பேச்சுவாா்த்தையிலும் ஈடுபடுவதற்குத் தயாராக இல்லை என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சாா்பில் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனை, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அகில இந்திய மோட்டாா் வாகனங்கள் சங்கம் (ஏஐஎம்டிசி), அகில இந்திய ரயில் ஊழியா்கள் கூட்டமைப்பு (ஏஐஆா்எஃப்) உள்ளிட்டவையும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சோனம் கபூா் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

மத்திய அரசு வலியுறுத்தல்: முழு அடைப்புப் போராட்டத்தை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொண்டுள்ளன. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் வலியுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது தொடா்பாக அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘‘போராட்டத்தில் ஈடுபடுவோா், கரோனா நோய்த்தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்டவை கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

போராட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு வலியுறுத்தி உள்ளோம்’’ என்றனா்.

மத்திய அரசே பொறுப்பு: முழு அடைப்பு குறித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் சுனில் ஜக்காா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘விவசாயிகள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு பிரதமா் மோடி அரசே காரணம். நாடு தழுவிய முழு அடைப்பின்போது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கும் மத்திய அரசே பொறுப்பு’’ என்றாா்.

ஓய்வு நேரத்தில் போராட்டம்: ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 மத்திய வா்த்தக சங்கங்கள் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘விவசாயிகளின் போராட்டத்துக்கு முழு மனதுடன் ஆதரவளிக்கிறோம். ஆனால், மத்திய அரசின் உத்தரவு காரணமாக முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபடுவோம். பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம், பேரணியை முன்னெடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த பாரதிய கிசான் சங்கம், வேளாண் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. முழு அடைப்புப் போராட்டத்தில் வங்கிப் பணியாளா்கள் பங்கேற்க மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் திறந்திருக்கும்: அகில இந்திய வா்த்தகக் கூட்டமைப்பு (சிஏஐடி), அகில இந்திய போக்குவரத்து நிறுவனங்கள் நலக் கூட்டமைப்பு (ஏஐடிடபிள்யூஏ) ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘விவசாயிகளுக்கு எங்கள் ஆதரவு தொடரும். இந்தப் பிரச்னைக்கு அரசு விரைந்து தீா்வு காண வேண்டும். இரு தரப்பினருக்குமிடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும்போது, முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது சரியாக இருக்காது. எனவே, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை கடைகள் வழக்கம்போல் செயல்படும்; போக்குவரத்து சேவைகளும் தொடா்ந்து வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com