
கண்ணூர்: கேரளத்தில் கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்ற தனது கருத்து, தேர்தல் நடத்தை விதி மீறலாகாது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.
கேரளத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய பினராயி விஜயன், கேரள மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும். இதுதான் அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக ஆகிய அரசியல் கட்சிகள், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.
இதைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கரோனா தடுப்பூசி தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கே முதல்வர் இவ்வாறு பதிலளித்தார். அத்துடன் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்பது தங்களின் தேர்தல் வாக்குறுதியிலும் இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் திங்கள்கிழமை வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், "கேரளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக, உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி பெரும் வெற்றியைப் பெறும்.
கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தற்போது இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தடுப்பு மருந்தும் கரோனா சிகிச்சையின் ஒரு பகுதிதான். தடுப்பு மருந்தையும் இலவசமாகவே வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதுகுறித்துப் பேசியது எந்த வகையிலும் தேர்தல் நடத்தை விதிமுறையில் வராது.
இந்தத் தேர்தல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்குப் பெரும் பின்னடைவாக இருக்கும். அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இரண்டாவது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் தனது அடித்தளத்தையே இழக்கும்' என்றார்.