
பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்
புது தில்லி: "விவசாயம் என்பது ஒரு "தாய் துறை'; அதற்கு எதிராக எந்தவொரு "பிற்போக்கான நடவடிக்கை' யும் ஒரு போதும் எடுக்கப்பட மாட்டாது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் 19 நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் திங்கள்கிழமையன்று உண்ணாவிரதம் இருந்தனர். இதேபோன்று பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், "நமது விவசாயத் துறைக்கு எதிராக எப்போதும் பிற்போக்கான முடிவுகள் எடுக்கப்படாது. இதில் எந்த சந்தேகமும் எழக் கூடாது' என்றார்.
இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (ஃபிக்கி) 93- ஆவது ஆண்டுக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு திங்கள்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :
இந்திய விவசாயிகளின் நலன்களை மனதில் கொண்டு புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும், நமது விவசாய சகோதரர்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்பதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கும் நாங்கள் திறந்த மனதுடன் தயாராக இருக்கிறோம். வேளாண்மை என்பது தொற்று நோயின் பாதகமான விளைவுகளைத் தவிர்க்கக் கூடியதாகவும், உண்மையில் சிறந்த வளர்ச்சியையும் காட்டியுள்ளது. நமது உற்பத்திகள், கொள்முதல் ஏராளமாக உள்ளன. வேளாண் கிடங்குகளும் நிரம்பியுள்ளன.
காரோனா தொற்று சமயங்களில்கூட நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற்றது. நிகழ் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் அந்நிய நேரடி முதலீடாக 35.73 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் ஒப்பிடும்போது இது 13 சதவீதம் அதிகமாகும் என்றார் அமைச்சர் ராஜ் நாத் சிங்.
பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டு: முன்னதாக, லடாக் எல்லை பிரச்னையைக் குறிப்பிட்டு ராஜ் நாத் சிங் பேசுகையில், "கிழக்கு லடாக் எல்லையான நடைமுறை கட்டுப்பாடு (எல்ஏசி) கோட்டில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தினர் திடீர் ஆக்கிரமிப்பை மேற்கொண்டனர். ஆனால், இந்திய பாதுகாப்புப் படையினர் மிகுந்த துணிச்சலுடன் போராடி அவர்களைத் திரும்பச் செல்ல வைத்தனர்.
நமது படைகளின் இந்த ஆண்டின் சாதனையைக் கண்டு தேசத்தின் எதிர்காலத் தலைமுறையினர் பெருமைப்படுவார்கள். சவால்களைக் கையாள்வதில் இந்திய ஆயுதப் படைகள் தைரியத்தையும், ஆற்றலையும் வெளிப்படுத்தி முன்மாதிரியாக உள்ளன.
இந்திய இமயமலை எல்லைகளில் " திடீர் ஆக்கிரமிப்பு' என்பது உலகம் எவ்வாறு மாறுகிறது, தற்போதுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பான ஒப்பந்தங்கள் எவ்வாறெல்லாம் சவாலுக்குரியதாகிறது என்பதை இந்தச் சம்பவங்கள் நினைவூட்டுகின்றன என்றார்.