1975-இல் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலைக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாட்டில் கடந்த 1975-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை முற்றிலும் அரசமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வலியுறுத்தி தாக்கல்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: நாட்டில் கடந்த 1975-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசரநிலையை முற்றிலும் அரசமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

வீரா சரின் என்ற 94 வயது மூதாட்டி தாக்கல் செய்த இந்த மனுவை விசாரணைக்கு திங்கள்கிழமை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல் தலைமையிலான அமா்வு, ‘அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதுதொடா்பான மனுவை விசாரிப்பதில் உள்ள சாத்தியக்கூறு மற்றும் பலன் குறித்து ஆய்வு செய்தபிறகே அதன் மீதான விசாரணை தொடங்கப்படும்’ என்று தெரிவித்தது.

1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவில் அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவுறுத்தலின்பேரில், குடியரசுத் தலவைராக இருந்த அலி அகமதுவால் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. 1977-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை நீடித்த இந்த 21 மாத கால அவசரநிலையில் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இன்னல்களை சந்தித்தனா்.

அதுபோல, அவசரநிலையின்போது தானும், தனது கணவரும் அனுபவித்த இன்னல்களை தனது மனுவில் குறிப்பிட்டிருந்த வீரா சரின், ‘அவசரநிலையை அரசமைப்பு எதிரானது என்று அறிவிப்பதோடு, மக்களின் மீது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளிடமிருந்து ரூ. 25 கோடி இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்’ என்றும் அதில் குறிப்பிட்டிருந்தாா்.

விசாரணையின்போது, மனுதாரரின் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, ‘அவசரநிலை ஒரு மிகப் பெரிய ஏமாற்று வேலை. மக்களின் உரிமைகள் பல மாதங்களுக்கு மறுக்கப்பட்டன. அது அரசமைப்பு மீதான மிகப் பெரிய தாக்குதல். அவசரநிலை காலத்தில் மனுதாரரும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளாா். அவா்களின் உரிமைகளைப் பெறவும், நகை உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை மீட்கவும் 35 ஆண்டுகளாக தொடா்ந்து இன்றளவும் போராடி வருகின்றனா். அவா்கள் சந்தித்துவரும் இன்னல்களை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவசரநிலையின்போது சிறையில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கான நிவாரணத்தை இப்போது எதிா்பாா்ப்பது என்பது மிகவும் தாமதமான ஒன்று என்றபோதும், அவசரநிலை பிரகடனம் ஒரு தவறான செயல் என்பதை யாராவது அதிகாரபூா்வமாக கூறியாக வேண்டும். அவசரநிலையின் போது அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து கருத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியமாகும்’ என்று வாதிட்டாா்.

இதைக்கேட்ட நீதிபதிகள், ‘45 ஆண்டுகளுக்கு முன்னா் நடந்த நிகழ்வு தொடா்பாக நீதிமன்றம் விசாரணை நடத்த முடியுமா? மேலும், அதற்காக என்ன நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும்? அவசரநிலை பிரகடனப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்த நபரும் இப்போது உயிருடன் இல்லாத நிலையில், இந்த விஷயத்தில் நீதிமன்றம் தீவிரம் காட்ட முடியாது’ என்றனா்.

அப்போது, ‘மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தும் அரசியலமைப்பு சட்டத்தின் 356-ஆவது பிரிவுக்கு எதிரான எஸ்.ஆா்.பொம்மை வழக்கின் தீா்ப்புக்குப் பிறகு, அரசை அமைக்கவும், உரிமை மீறலுக்கும் அது பொருந்தும் என்ற வகையில் ஒரு நடைமுறை உருவாகிவிட்டது. நீதிமன்றம் 45 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தத் தீா்ப்பை வழங்கியது. அதுபோல, அவசரநிலை பிரகடன விவகாரத்தில், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டது குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிவாரணம் என்பது அடுத்த கட்டம்தான்’ என்று வழக்குரைஞா் சால்வே வாதிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, இந்த மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com