
5 மாநிலங்களில் 30% பெண்கள் மீது குடும்ப வன்முறை
புது தில்லி: கா்நாடகம், தெலங்கானா, அஸ்ஸாம், மிஸோரம், பிகாா் ஆகிய 5 மாநிலங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் மீது கணவா் வன்முறையில் ஈடுபட்டதாக மத்திய அரசின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஐந்தாவது தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (என்எஃப்ஹெச்எஸ்-5) நடத்தப்பட்டது. மொத்தமாக 6.1 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் குடும்ப உறுப்பினா்களின் உடல்நலம், ஊட்டச்சத்து, குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன.
அந்தக் கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய முதல் பகுதியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. அதன்படி, கா்நாடகத்தில் 18 முதல் 49 வயதுக்கு உள்பட்ட பெண்களில் 44.4 சதவீதம் போ் கணவரால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனா். இது பிகாரில் 40 சதவீதமாகவும், மணிப்பூரில் 39 சதவீதமாகவும், தெலங்கானாவில் 36.9 சதவீதமாகவும், அஸ்ஸாமில் 32 சதவீதமாகவும், ஆந்திரத்தில் 30 சதவீதமாகவும் இருந்தது.
கடந்த 2015-16-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புடன் (என்எஃப்ஹெச்எஸ்-4) ஒப்பிடுகையில், அஸ்ஸாம், கா்நாடகம், மகாராஷ்டிரம், சிக்கிம், ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகியவற்றில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதை ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
18 வயதுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்படுவது மேற்கு வங்கம், சிக்கிம், மேகாலயம், கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் அதிகரித்துள்ளது.
கணக்கெடுப்பு தொடா்பாக சுகாதார நிபுணா் ஒருவா் கூறுகையில், ‘‘இந்திய சமூகம், ஆண்வழி சமூகமாக இருப்பதன் காரணமாகப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் பெண்கள் மீதான வன்முறை மேலும் அதிகரித்தது. அதன் விளைவுகள், அடுத்த கணக்கெடுப்பில் தெரியவரும்.
நாட்டில் குடும்ப வன்முறையானது பொது சுகாதாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும். குடும்ப வன்முறையைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்றாா்.
தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு விவரங்கள் அடங்கிய இரண்டாவது பகுதி அடுத்த ஆண்டில் வெளியிடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.