விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம்: தோமர்

உண்மையான விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரும்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உண்மையான விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரும்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து பாரதிய விவசாய சங்க உறுப்பினர்கள் வேளாண் அமைச்சர் தோமரை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்தனர். அப்போது, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கடிதம் சமர்பிக்கப்பட்டது.

இந்த சந்திப்புக்குப் பிறகு சங்கத் தலைவர் பவன் தாக்குர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"வேளாண் சட்டங்கள் குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். சட்டம் உண்மையில் சிறப்பாக இருப்பதை உணர்ந்தோம். எங்களுக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அவை அனைத்தையும் அவர் தெளிவுபடுத்திவிட்டார். எங்களது கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

எங்களுடைய சங்கம் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தியுள்ளது. எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் தேவை. அப்படி இயற்றப்பட்டால்தான், மண்டிகளுக்கு வெளியே குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக பயிர்கள் விற்பனை செய்யப்படாது. குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விற்க கட்டாயப்படுத்தப்பட்டதால், காரிப் பருவக் காலத்தில் விவசாயிகள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர். எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கத் தயார். பயிர்கள் தற்போது எந்த விலைக்கு விற்கப்படுகிறது எனத் தெரியவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலைக்கு மேல் விற்பனை செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாகவே பயிர்கள் விற்பனை செய்யப்படுகின்றன" என்றார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரதிய விவசாய சங்கத் தலைவர்களுக்கு நன்றி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. உண்மையான விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு விரும்புகிறது."

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து 40 விவசாய சங்கங்கள் தில்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றன. அமைச்சரைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள பாரதிய விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வரும் 40 விவசாய சங்கங்களுடன் சேர்ந்தவர்கள் அல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com