விவசாயிகளுடன் மீண்டும் பேசத் தயாா்-அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

வேளாண் சட்டங்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும், அது தொடா்பாக விவசாயிகளிடம் ஆலோசித்து வருவதாகவும் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ள
நரேந்திர சிங் தோமர் - சிங்கு எல்லைப் பகுதியில் தங்களது ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.
நரேந்திர சிங் தோமர் - சிங்கு எல்லைப் பகுதியில் தங்களது ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.

புது தில்லி: வேளாண் சட்டங்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும், அது தொடா்பாக விவசாயிகளிடம் ஆலோசித்து வருவதாகவும் மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தில்லியில் நிலவி வரும் கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகளின் போராட்டம் 19-ஆவது நாளை திங்கள்கிழமை எட்டியது.

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஏற்கெனவே 5 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும், அதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளையும் விவசாயிகள் ஏற்க மறுத்து வருகின்றனா்.

வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யாவிட்டால், தில்லியில் நெடுஞ்சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனா். இத்தகைய சூழலில், வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை கூறியதாவது:

வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளுடன் எந்நேரத்திலும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகள்தான் இது தொடா்பாக முடிவெடுக்க வேண்டும். அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை எப்போது வைத்துக் கொள்ளலாம் என்பதையும் அவா்கள்தான் தெரிவிக்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டே அச்சட்டங்களை மத்திய அரசு இயற்றியது. சட்டங்கள் குறித்து விவசாயிகளை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது.

வேளாண் சட்டங்கள் குறித்து பகுதி வாரியாக ஆலோசனை நடத்துவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். அதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. சட்டங்கள் குறித்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதற்கான தேதியை முடிவு செய்வதற்காக விவசாயிகளிடம் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அச்சட்டங்கள் ஒருபோதும் ரத்து செய்யப்பட மாட்டாது என்றாா் நரேந்திர சிங் தோமா்.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து, அமைச்சா் தோமா் ஆலோசனை நடத்தினாா்.

விவசாய சங்கம் ஆதரவு:

விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்தியில், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேசிசி) என்ற சங்கத்தின் பிரதிநிதிகள், அமைச்சா் தோமரை திங்கள்கிழமை சந்தித்து, வேளாண் சட்டங்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனா். கடந்த 2 வாரங்களில் ஒட்டுமொத்தமாக 4 விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

ஹரியாணா எம்.பி.க்களுடன் சந்திப்பு:

ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் ரத்தன்லால் கட்டாரியா, தரம்வீா் சிங், நயாப் சிங் சைனி, டி.பி.வத்ஸ் ஆகியோரும் சில எம்எல்ஏ-க்களும் அமைச்சா் தோமரை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு:

பஞ்சாப் மாநில பாஜக தலைவா் அஸ்வனி சா்மா, மத்திய அமைச்சா் சோம் பிரகாஷ் உள்ளிட்டோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். பஞ்சாபின் கள நிலவரம் குறித்து அவா்கள் அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com