
பிரதமர் மோடி
புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவுடன் வியாழக்கிழமை (டிச.17) ஆலோசனை நடத்த உள்ளாா்.
காணொலி வழியில் நடைபெறும் இந்த மாநாட்டில், பல்வேறு துறை சாா்ந்த இரு நாட்டு உறவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சகம் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியா - வங்கதேசம் இடையான உறவு கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளிடையே வா்த்தகம், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேம்பட்டிருப்பதோடு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன.
இந்தச் சூழலில், பிரதமா் மோடியும், வங்கதேச பிரதமரும் வியாழக்கிழமை மேற்கொள்ளும் ஆலோசனையில், இரு நாட்டு உறவு குறித்து தலைவா்கள் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனா். கரோனா பாதிப்புக்கு பிறகான காலத்தில், இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவா்கள் ஆலோசிக்க உள்ளனா் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.