பிரிட்டனுக்கு விமான சேவை ரத்து: புதிய வகை கரோனா தீநுண்மிப் பரவல் எதிரொலி

பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி பரவலைத் தொடர்ந்து இந்தியா-பிரிட்டன் இடையே அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக
பிரிட்டனுக்கு விமான சேவை ரத்து: புதிய வகை கரோனா தீநுண்மிப் பரவல் எதிரொலி


புது தில்லி: பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி பரவலைத் தொடர்ந்து இந்தியா-பிரிட்டன் இடையே அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். 

இந்தியா-பிரிட்டன் இடையே அனைத்து விமான சேவைகளும் டிச. 22-ஆம் தேதி இரவு 11.59 முதல் டிச.31-ஆம் தேதி இரவு 11.59 வரை ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.  

கனடா உள்ளிட்ட நாடுகளும்...உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்க சில நாடுகளில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மிப் பரவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் புதிய வகையான கரோனா தீநுண்மி வேகமாகப் பரவி வருவதால் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் வகையில் கடுமையான பொது முடக்கத்தை அந்த நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை (டிச.20) முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.  இதைத் தொடர்ந்து, கனடா, துருக்கி, பெல்ஜியம், இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் பிரிட்டனுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. 

அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: புதிய வடிவில் கரோனா தொற்று ஒரு சில நாடுகளில் பரவி வருவதையடுத்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பிரிட்டனில் கரோனா தீநுண்மிப் பரவும் சூழல் உள்ளதால், அந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமான சேவைகளையும் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் வரும் 31-ஆம் தேதி இரவு 11:59 வரை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரத்து  22-ஆம் தேதி இரவு 11:59 மணியிலிருந்து அமலுக்கு வரும் என்றார்.

பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மிப் பரவல் குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகம் திங்கள்கிழமையன்று (டிச.21) கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

கரோனா பரிசோதனை கட்டாயம்: 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமானங்களின் (ஏற்கெனவே புறப்பட்ட விமானங்கள், 22-ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் இந்தியாவுக்கு வரும் விமானங்கள்) பயணிகளையும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் (கரோனா) பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட வேண்டும். பரிசோதனையில் கொவைட் 19 நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும்' என்றார் அமைச்சர் ஹர்தீப் சிங் புரி.

தடுப்பூசிகளுக்கு கட்டுப்படும்: புதிய வகை கரோனா தீநுண்மி தடுப்பூசிகளுக்கு கட்டுப்படும் என்று மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர். 

தற்போது பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மி பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து தடுப்பூசிகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.  தடுப்பூசிகளுக்கு புதிய வகை கரோனா தீநுண்மி கட்டுப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பதிலளித்துள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள், தடுப்பூசிகளுக்கு புதிய வகை கரோனா தீநுண்மி கட்டுப்படும்;  தீநுண்மியின் மாற்றம் அடையும் தன்மையைக் கருத்தில் கொண்டே தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com