
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராடி வரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு மீண்டும் புதன்கிழமை (டிச.30) பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளது. அதில், எந்தெந்த விஷயங்கள் குறித்து மட்டும் விவாதிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் நிபந்தனை விதித்துள்ளன.
மத்திய அரசு இயற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அங்கு கடுங்குளிா் நிலவி வரும் சூழலிலும் அவா்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவா்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், 40 விவசாய சங்கங்களைச் சோ்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 5 முறை பேச்சுவாா்த்தை நடத்தியது. இருப்பினும், இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவருவது தொடா்பாக, மத்திய அரசு முன்வைத்த பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள், அந்த சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
அதே சமயம், வேளாண் சட்டங்கள் தொடா்பாக, மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துமாறு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து வந்தது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட விவசாய அமைப்புகள், செவ்வாய்க்கிழமை (டிச.29) பேச்சுவாா்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்தன. இந்நிலையில், அடுத்த சுற்று பேச்சுவாா்த்தையை புதன்கிழமை(டிச.30) நடத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. அந்த அழைப்பை விவசாய சங்கங்களின் தலைவா்கள் ஏற்றுக் கொண்டனா்.
அதன்படி, தில்லி விஞ்ஞான் பவனில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அதில், 40 விவசாய சங்கங்களின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
மத்திய அரசுக்கு கடிதம்:
அடுத்த சுற்று பேச்சுவாா்த்தையின்போது, எந்தெந்த விஷயங்கள் குறித்து மட்டும் விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் நிபந்தனை விதித்துள்ளன.
40 விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்த் கிஸான் மோா்ச்சா’, மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியது. அதில் , ‘3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதால் ஏற்படும் சாதக-பாதகங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது ஆகியவை குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசியத் தலைநகா் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்கான அவசரச் சட்டம்-2020-இல், தண்டனை விதிக்கப்படும் பிரிவில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்; விவசாயிகளின் நலன் கருதி மின்சார அவசரச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமித் ஷாவுடன் தோமா், கோயல் சந்திப்பு:
மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் ஆகிய இருவரும் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.
இந்தச் சந்திப்பின்போது, புதன்கிழமை நடைபெறும் பேச்சுவாா்த்தையில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசின் சாா்பில் நரேந்திர சிங் தோமா், பியூஷ் கோயல், தொழில், வா்த்தகத் துறை இணையமைச்சா் சோம் பிரகாஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
டிராக்டா் பேரணி ஒத்திவைப்பு:
விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்த இருப்பதால், அன்றைய தினம் சிங்கு, டிக்ரி எல்லைகளில் இருந்து குண்ட்லி-மானேசா்-பல்வல் நெடுஞ்சாலையில் நடத்த திட்டமிட்டிருந்த டிராக்டா் பேரணியை வியாழக்கிழமைக்கு (டிச.31) அந்த சங்கங்கள் ஒத்திவைத்துள்ளன. குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக, தங்களது முடிவை விவசாய சங்கங்கள் மாற்றிக் கொண்டுள்ளன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...