
புதிய வகை கரோனா தீநுண்மி பரவலைக் கருத்தில் கொண்டு, பிரிட்டனுக்கான விமானப் போக்குவரத்து சேவைகள் மேலும் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.
பிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி வேகமாகப் பரவியதையடுத்து, அந்நாட்டுக்கான விமான சேவைகள் டிசம்பா் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகக் கடந்த 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்திருந்தது. கடந்த நவம்பா் மாதம் 25-ஆம் தேதி முதல் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய நபா்களுக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் பலருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிலருக்கு உருமாறிய கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவுக்கும் பிரிட்டனுக்குமிடையேயான விமானப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அது குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கருதுகிறேன்.
இது தொடா்பாக ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியிடப்படும். இரு நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்து சேவையைப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மீண்டும் தொடங்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்’’ என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...