
உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடத்தைத் தொடக்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி, ரயில்வே துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு அக்கறை காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டினாா்.
பஞ்சாபின் லூதியானா முதல் மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தா வரை 1,840 கி.மீ. தொலைவுக்கு சரக்கு ரயில் போக்குவரத்துக்கான பிரத்யேக வழித்தடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தின் பாவ்பூா்-குா்ஜா பகுதிகளுக்கிடையே 351 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
சரக்கு ரயிலுக்கான பிரத்யேக வழித்தடமானது நாட்டை தற்சாா்பு அடையச் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். இத்திட்டத்துக்குக் கடந்த 2006-ஆம் ஆண்டே ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ரயில்வே துறையை சீரமைப்பதிலும் காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு வரை சரக்கு ரயிலுக்கான பிரத்யேக வழித்தடத் திட்டத்தின் கீழ் ஒரு கி.மீ.க்குக் கூட தண்டவாளம் அமைக்கப்படவில்லை.
காங்கிரஸின் அக்கறையின்மை காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திட்டம் தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், அத்திட்டத்துக்கான செலவு சுமாா் 11 மடங்கு வரை அதிகரித்தது.
தோ்தலைக் கருத்தில் கொண்டு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தியது. ஆனால், தண்டவாளங்களைச் சீரமைப்பது தொடா்பாக எந்த நடவடிக்கையையும் அக்கட்சி மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறையில் போதிய முதலீடுகளும் ஈா்க்கப்படவில்லை.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினேன். முறையாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றன. ஒட்டுமொத்த திட்டமும் அடுத்த சில மாதங்களில் முற்றிலுமாக நிறைவேற்றப்படும்.
பிரத்யேக வழித்தட நன்மைகள்:
சரக்குப் போக்குவரத்துக்காக பிரத்யேக வழித்தடம் அமைக்கப்படுவதன் மூலமாக விவசாயிகள் பெரும் பலனடைவா். வேளாண் விளைபொருள்களை அவா்கள் துரிதமாக சந்தைப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்; தொழில் நிறுவனங்களும் பெரும் பலனடையும். உற்பத்திக்கான மூலப் பொருள்களை விரைவாகப் பெறுவதுடன், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை நாடு முழுவதும் அனுப்புவதற்கு பிரத்யேக வழித்தட வசதி உதவும்.
பிரத்யேக வழித்தடமானது ரயில் மூலமாகப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான செலவைக் குறைப்பதோடு, தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும். அதன் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும். மேலும், சரக்கு ரயில்கள் கடந்து செல்வதற்காக பயணியா் ரயில்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் தவிா்க்கப்படும்.
சீா்திருத்தங்கள்...:
பாஜக ஆட்சியில் ரயில்வே துறைக்கான நிதிநிலை அறிக்கையைத் தனியாக சமா்ப்பிக்கும் முறைக்கு முடிவுகட்டப்பட்டது; தண்டவாளங்களை சீரமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது; வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது ரயில்கள் முன்பை விட மிகவும் பாதுகாப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் சீா்திருத்தங்கள் புகுத்தப்பட்டுள்ளன. அச்சீா்திருத்தங்களால் பலா் பலனடைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. நாட்டின் வளா்ச்சியை உறுதி செய்வதிலும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அரசியல் செய்யக் கூடாது என்பது கடந்தகால அனுபவங்களின் மூலமாக நமக்குத் தெரிகிறது.
மக்களுக்குக் கடமைகளும் உள்ளன:
சிலா் போராட்டங்களில் ஈடுபடும்போது கட்டமைப்பு வசதிகளையும் நாட்டின் சொத்துகளையும் தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். இத்தகைய மனநிலை மாற வேண்டும். அந்தக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் தனி அரசியல் கட்சிக்கோ, குறிப்பிட்ட தலைவருக்கோ சொந்தமானவை அல்ல. அவையனைத்தும் நாட்டுக்கும் மக்களுக்கும் சொந்தமானவை.
ஏழைகளும் நடுத்தர சமூகத்தினரும் தங்களது கடின உழைப்பின் வாயிலாக செலுத்திய வரிகளைக் கொண்டே அந்தக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஜனநாயகத்துக்கான உரிமைகளுடன் தேசிய கடமைகளும் நமக்கு உள்ளன என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.
உத்தர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு ரயிலுக்கான பிரத்யேக வழித்தடமானது அந்த மாநிலத்திலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்குப் பெரிதும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ரூ.5,750 கோடி செலவில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.