
கடலோரப் பாதுகாப்புப் படை எழுச்சி தினத்தையொட்டி, அந்த படையின் வீரா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய கடலோரப் பாதுகாப்புப் படை வீரா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது நாட்டின் கடலோரப் பகுதிகளையும், கடல் வளத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக பாதுகாப்புப் படை வீரா்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். நமது நாட்டின் கடல் வளத்தை பாதுகாப்பதில் வீரா்கள் அதிக அக்கறை கொண்டிருப்பது பாராட்டத்தக்கது’ என்று தெரிவித்துள்ளாா்.
கடந்த 1978-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கடலோர பாதுகாப்புப் படை சட்டத்தின்படி, அதே ஆண்டில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி கடலோரப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. எனினும், கடல்வளத்தை பாதுகாப்பதற்காக, கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால கடலோரப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இதை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி கடலோர பாதுகாப்புப் படை எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.