

புது தில்லி: கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்தியா வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின், ஹூபெ மாகாணத்தில் கரோனா வரைஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் நிலையில், அங்கு சிக்கி தவித்த இந்தியர்களை, ஏர் இந்தியா போயிங் 747 ரக சிறப்பு விமானத்தின் மூலம் சனிக்கிழமை தில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் தனி மருத்துவ முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர் ஹரியாணா மாநிலம் மானேசரில் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தனி மருத்துவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த மருத்துவமுகாமில் 14 நாள்கள் வரை தங்கவைக்கப்பட்டு அவர்களது உடல்நிலை கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 25 நாடுகளுக்கு பரவியுள்ள கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு சீனாவைச் சேர்ந்தவர்கள், சீனப் பயணிகள் மற்றும் அங்கிருந்து இந்தியா வர விரும்பும் வெளிநாட்டினருக்கான இ-விசா சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்தது.
இதற்கு "தற்போது சீனாவில் நிலவி வரும் சில நிகழ்வுகள் காரணமாக, இ-விசாக்களில் இந்தியாவுக்கான பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது," என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்திருந்தது. இதனால் சீனாவிலிருந்து வரக்கூடிய அந்த நாட்டு பயணிகள் மற்றும், அந்த நாட்டிலிருந்து இந்தியா வர விரும்பும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-விசா அளிக்கப்படாது. "சீன பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் மக்கள் சீனக் குடியரசில் வசிக்கும் பிற நாடுகளின் விண்ணப்பதாரர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். ஏற்கனவே வழங்கப்பட்ட இ-விசாக்களை வைத்திருப்பவர்களும் இது இனி செல்லுபடியாகாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் "இந்தியாவுக்கு வருகை தந்தேயாக வேண்டிய கட்டாய காரணம் இருந்தால், அவர்கள் அனைவரும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காய் அல்லது குவாங்சோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இந்த நகரங்களில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களை தொடர்பு கொள்ளலாம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியா வர மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்தியா வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனர்கள் அல்லது பிற வெளிநாட்டினர் உட்பட, இந்தியாவில் எந்த இடத்திற்கும் தங்கள் விமானங்களில் பயணிக்க உரிய ஈடிஏ / இ-விசா வைத்திருந்தாலும், சீனாவிலிருந்து எந்தவொரு பயணியையும் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த உத்தரவு திரும்பப்பெறும் அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என்று கொல்கத்தாவில் உள்ள இந்திய உள்துறை அமைச்சகத்தின் குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு, 2020 பிப்ரவரி 7 ஆம் தேதி ஹாங்காங் செல்லவிருந்த AI314 என்ற விமான சேவை ஏர் இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.